குறுங்கதைகள்

பழக்கம் எனும் மகாசக்தி

பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன்.

+++++

நட்பு

நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து அதை சீர் செய்யும் நடவடிக்கையை எடுக்க நெடுநேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நண்பனும் என் நினைவில் வரவில்லை. அவர்கள் நினைவிலும் நான் வராமல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் அளித்த ஆறுதலில் குற்றவுணர்வு கரைந்து போனது.

+++++

பூனைக்கு வந்த காலம்

சில உயர்அதிகாரிகளின் நிலை பாவமாய் இருக்கும். நன்கு அதிகாரம் பண்ணி நம்மை கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கும் மேலான ஓர் அதிகாரி நம்மை அழைத்து நம் வேலையைப் பற்றிப் பாராட்டிப் பேசும் போது அருகில் இருக்கும் நம் அதிகாரியின் முகம் ரசிக்கத் தக்க ஹாஸ்யக்காரனின் பாவத்தில் காணப்படும். போன வாரம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. பாவ்லா காட்டியவாறே இத்தனை மாதங்களாக அவர் செய்து வந்த ஒரு பணி எதிர்பாராதவிதமாக கைமாறி எனக்களிக்கப்பட்டது. “இனிமேல் நீயும் சீனியர் மேனேஜ்மென்டின் ஒர் அங்கம்” என்று சொல்லி அவர் கைகுலுக்குகையில் “தயவுசெய்து என்னை மேலே போட்டுக் கொடுத்துவிடாதே” என்று சொன்னது அவர் உடல்மொழி.

+++++

திருப்தி

என் நண்பர் ஒருவரிடம் ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு அதைப் பற்றிச் சொன்னால் உடனே தானும் அதைப் பார்த்துவிட்டதாகச் சொல்லுவார். அதில் நடித்த நடிகர் பெயரைச்சொல்லி அவரின் நடிப்பை குறை சொன்னால் உடனே மறுப்பு சொல்வார் நண்பர். தேர்ந்த விமர்சகர் போல “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது ;  கொடுக்கப்பட்ட ‘ரோலை’ திருப்தியா செஞ்சுருக்காரு” என்பார். நடிகர் பண்ணிய ‘ரோல்’ என்ன என்று நானும் அவரைக் கேட்பதில்லை ; அவரும் சொல்வதில்லை.

——-

பாத்திரத்தில் நிலைத்திருத்தல்

பெரிய பொய்களை அழகிய வார்த்தைகளுக்குள் அடக்கி கண்களை உருட்டியபடி பேசிக் கொண்டிருந்த அதிகாரியை விரலை லேசாக உயர்த்தி தடுத்து நிறுத்திய வாடிக்கையாளரின் பிரதிநிதி – நல்லா பேசுறிங்க ஆனா என்னால் நம்ப முடியல – என்றார். பொய்களுக்கு எந்த வடிவம் கொடுப்பது என்று புரியாமல் விழித்த அதிகாரி என்னை நோக்கினார். உண்மையை மறைமுகமாக பாதி மறைத்துச் சொல்லும் முயற்சியில் நான் பேசத் தொடங்குவதற்குள் பிரதிநிதி இடைமறித்து – மேல சொல்லுங்க உங்க பொய்ய வச்சு உங்க நிறுவனத்தை எடை போடமாட்டேன் – என்றார். அதிகாரி தப்பித்தோம் பிழைத்தோம் என விடுவிடென்று மின்னல் வேகத்தில் பிரசன்டேஷனை ஓட்டிமுடித்து மடிக்கணினியை மூடினார். வாடிக்கையாளரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன்  – இது மாதிரி மூஞ்சி முன்னால பேசுறவங்களே பெட்டர் – என்று அதிகாரி என்னிடம் சொன்னபோது – மீட்டிங் முடிஞ்சிருச்சி, இன்னும் எதுக்கு ஸேல்ஸ் பிட்ச் மோட்லயே இருக்கீங்க – என்று கேட்கத் தோன்றிற்று. ஆனால் அப்படிச் சொல்லாமல் – சரியாச் சொன்னீங்க – என்று சொல்லி நானும் பாத்திரத்திலேயே தொடர்ந்து இருந்தேன்.


—–

சிலேடை

போராடும் ஒரு நடிகர் எந்த வேடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார் ; பழுத்த அனுபவஸ்தர்களான மூத்த கார்ப்பரேட் அதிகாரிகளும் எந்த பணியையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இயக்குனர்களின் வழிநடத்தலின்படி பூணும் கோமாளி வேடமும் இதில் அடக்கம்.

—–

எழுதிப்பார்த்த போது…

அனுபவப் பகிர்வு எளிது. படித்துப் புரிந்து கொண்டதையும் அறிந்துகொண்டதையும் பகிர்தலும் எளிது. புரியாததையும் அறியாததையும் பகிர்தல் அவசியமில்லாதது. தொடர்புறுத்தல் வாயிலாக பெறப்படும் இணைவுகள், வாசிப்பின் நினைவு கூறல்கள், உரிய வடிவம் குறித்த பிரக்ஞை, நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட பார்வைகள், கூரிய கவனிப்பு ஆகிய கூறுகள் மனப்பயிற்சியினால் அடையக்கூடியவை. சரியான புரிந்துணர்வை எய்துங்காலை சொற்கள் தம்மைத்தாமே உருப்பெருக்கிக் கொள்ளும். தமக்கான உண்மைகளை எழுதுதலோ பிறருக்கான உண்மைகளை எழுதுதலோ இரண்டுமே அடிப்படையில் ஒன்று என்ற தெளிதல் கைவந்துவிட்டால்  எல்லைகளற்ற எங்கும் பரந்த மைதானத்தில்  எழுத்தோட்டம் நிரந்தரமாய் நிகழ்ந்தவாறிருக்கும். (ஒரு ஃப்லோல வந்தது ; சீரியஸா எடுத்துக்கப்படாது)